Home » அரசியல் » ஸ்டாலினை எதிர்த்து தி.மு.க.வினர் போஸ்டர்

ஸ்டாலினை எதிர்த்து தி.மு.க.வினர் போஸ்டர்

நெல்லை, ஜன.2: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்ததை தொடர்ந்து அழகிரி ஆதரவாளர்கள் நெல்லையில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். அதில் திமுகவை காப்பாற்ற அழகிரியும், தயாநிதி மாறனும் முன்வர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கை அடிப்படையில் அந்த தொகுதிக்குட்பட்ட வட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட செயலாளர் கள் சுதர்சனம், சேகர்பாபு ஆகியோர் மீதும் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் கிளை திமுகவே கலைப்புக்கு உள்ளாகும் நிலையில் அழகிரியின் ஆதரவாளர்கள் ஸ்டாலினை எதிர்த்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.கடந்த வாரம் மு.க.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மு.க.ஸ்டாலின் கட்சிக்கு தலைமை தாங்கும் வரையில் திமுக தேர்தலில் தோல்வி தான் அடையும்; வெற்றி பெற முடியாது என்று சொன்னார். இதையடுத்து அழகிரிக்கு தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு பெருகத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மு.க. அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரை திமுகவுக்கு தலைமை தாங்க வருமாறு அழைப்பு விடுக்கும் போஸ்டர் நெல்லை அருகே ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மேற்கு மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த, திமுக பிரமுகர், ஒன்றிய துணைத் தலைவராகவும் இருந்த சுதன் என்பவரின் புகைப்படத்துடன் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

நெல்லையில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் என்பது ஆரம்பம்தான். இனி தொடர்ந்து இது போன்ற போஸ்டர்கள் ஏராளமாக வர வாய்ப்பு இருக்கிறது. ஸ்டாலின் தலைமைக்கு இது பெரிய சவாலை ஏற்படுத்தும் என்று அழகிரியின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*