Home » தமிழ்நாடு » தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம்

சென்னை, ஜன. 2: தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த ஆணையம் மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் மருத்துவ, சுகாதார பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ ஆணையம் அமைக்கும் புதிய மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் மருத்துவமனைகளில் அவசர அறுவை சிகிச்சை மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை தவிர டி.பி. நோயாளிகளுக்கு இன்று சிகிச்சை அளிக்கப்படவில்லை. புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டன.

தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெறுவதற்கு மட்டுமே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். தனியார் மருத்துவமனைகளில் பணியாளர்களும், 60 ஆயிரம் டாக்டர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒரு மணி நேரம் புற நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து விட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஒருமணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் சங்க சென்னை மாவட்ட தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. வேலை நிறுத்தம் குறித்து இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் பிரகாஷ், ரவி சங்கர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வரும் மருத்துவ ஆணையத்தால் மாநில அரசுகளுக்கு உரிமையும், தொடர்பும் இல்லாத நிலை உருவாகி விடும். இந்த மசோதாவால் சில மாற்றங்களை செய்ய வேண்டும். மத்திய அரசு இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*