Home » தலையங்கம் » பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி

பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி

ஜம்மு காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்பதே பாகிஸ்தானின் கெட்ட நோக்கம். இதற்காக தீவிரவாதிகளை அந்த மாநிலதிற்குள் ஊடுருவச் செய்கிறது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே எல்லையில் அந்நாட்டு ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபடுகிறது. தீவிரவாதிகள் காஷ்மீரில்மட்டுமின்றி மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். 2001 டிசம்பர் 13ல் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் டெல்லி வரை ஊடுருவி நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தினர்.

இதற்கு இந்தியா சரியான பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2003ல் இரு நாடுகளிடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இருநாட்டுப் படையினரும் அத்துமீறி தாக்குதல் நடத்தக் கூடாது. ஆனால் இதை மீறுவதை பாகிஸ்தான் ராணுவம் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 820 தடவை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ராணுவம் மீறியிருக்கிறது.2017 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இந்த அத்துமீறல் முறையே 228, 152 என்ற அளவில் தான் இருந்துள்ளது. கடந்த 23ம் தேதி பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்பு படையினர் அத்துமீறி சுட்டதில் இந்திய மேஜர் உள்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று உள்ளூர் ராணுவ அளவில் முடிவெடுக்கப்பட்டு கமாண்டரின் ஒப்புதலுடன் கடந்த திங்கட்கிழமை மாலை 6.45 மணிஅளவில் கட்டாக் படைப் பிரிவைச் சேர்ந்த 6 வீரர்கள் பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல்கோட் பகுதிக்குள் ஊடுருவி தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி விட்டு திரும்பியிருக்கிறார்கள். இந்த அதிரடியில் பாகிஸ்தான் தரப்பில் மூன்று சிப்பாய்கள் உயிரிழந்து இருப்பதை அந்நாட்டு ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால் தங்கள் நாட்டு எல்லைக்குள் இந்திய ராணுவம் வரவில்லை என்று கூறுகிறது. 2016 செப்டம்பர் 29ல் இதே போன்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நடத்தியது.அப்போதும் இதே போல் பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்ததை இந்தியா பொருட்படுத்தவில்லை. தீவிரவாதிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கும் பதிலடி சரியானதே. ஆனால் அது இன்னும் பலமிக்கதாக இருக்க வேண்டும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*