சென்னை, டிச.17:ஓகி புயல் பாதிப்பை நேரில் பார்வையிட பிரதமர் மோடி 19-ம் தேதி தமிழகம் வருவதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோட்டையில் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண நிதி கேட்கும் மனுவை பிரதமரிடம் சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது.
காலை 11 மணிக்கு இந்த நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல் வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, துரைக்கண்ணு, உதயகுமார் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு மாநில அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ள போதிலும் மத்திய அரசிடம் கேட்ட பெற வேண்டிய நிவாரண நிதி குறித்து அமைச்சர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்கள் பிரச்சனையில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை சாய்ந்து விழுந்த மின்சார கம்பங்கள், சேதமடைந்த வீடுகள், படகுகள் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் அறிக்கை தயாரித்து பிரதமரிடம் வழங்குவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
உயிரிழந்த மீனவர் குடும்பத் தினருக்கு முதலமைச்சர் ரூ.20 லட்சம் உதவி வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். இதேபோல் பாதிக்கப்பட்ட மழை வாழ் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடி 18-ம் தேதி விமானம் மூலம் கொச்சி வருகிறார். இரவில் அங்கு ஓய்வெடுத்துவிட்டு 19-ம் தேதி காலை லட்சத்தீவு செல்கிறார். அன்று பிற்பகலில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வருவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மோடியின் வருகையின்போது குமரி மாவட்ட புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.