Home » Flash News » ஆர்.கே.நகரில் அணிவகுப்பு அதிரடி அதிகாரி சென்னை வந்தார்

ஆர்.கே.நகரில் அணிவகுப்பு அதிரடி அதிகாரி சென்னை வந்தார்

சென்னை, டிச.16: ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவத்தினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.தேர்தல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிரடி அதிகாரி பத்ரா இன்று நண்பகலில் சென்னை வந்தார். தேர்தல் விதிகளை யார் மீறினாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இதனிடையே தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் சென்னை வந்துள்ளது.

துணை ராணுவத்தினர் இன்று காலை ஆர்.கே.நகர் தொகுதியின் பல்வேறு இடங்களில் கொடி அணி வகுப்பை நடத்தினார்கள். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் வீதிகளில் அணி வகுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. காசிமேட்டில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை வரை ஆர்.கே.நகர் முழுவதும் இந்த அணிவகுப்பு நடந்தது. வாக்குப்பதிவு முடியும் வரை துணை ராணுவம் அந்த தொகுதியில் தங்கியிருக்கும்.

ஏற்கனவே முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தேர்தல் ஆணையம் பொருத்தி இருக்கிறது. அத்தொகுதிக்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கடுமையாக சோதனை செய்யப்படுகிறது.இதனிடையே சிறப்பு தேர்தல் பார்வையாளராக விக்ரம் பத்ரா என்ற வருமான வரித்துறை உயர் அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் லஞ்சத்தை எதிர்த்து கடுமையாக நடவடிக்கை எடுக்கக்கூடியவர் என்று பெயர் பெற்றவர் பத்ரா. ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த தேர்தலின் போது சிறப்பு பார்வையாளராக செயல்பட்டவர் பத்ரா. தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய அதிகாரியாக இருந்தவர் இவர். இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவரை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வரவேற்றார்.
விமான நிலையத்தில் விக்ரம் பத்ரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். என்னை சிறப்பு பார்வையாளராக நியமித்திருக்கிறார்கள். ஆர்.கே.நகரில் நேர்மையாக தேர்தல் நடைபெற நடவடிக்கை எடுக்கப்டும். சட்ட விதிகளை யார் மீறினாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுக்கு கொடுத்த கடமையை நான் நிறைவேற்றுவேன் என்று அவர் கூறினார்.பிற்பகலில் அவர் நேராக ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று தனது அதிரடி பணியை துவக்கவிருக்கிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*