Home » தலையங்கம் » ஆம்புலன்ஸ்க்கு தனிப்பாதை

ஆம்புலன்ஸ்க்கு தனிப்பாதை

108ஆம்புலன்ஸ்கள் உயிர் காக்கும் ரட்சகனாக சேவை செய்கின்றன. விபத்துக்களில் காயம் அடைவோர், நோயால் உயிருக்கு போராடுவோரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதில் இவற்றின் பங்கு அளப்பரியது. இதன் ஓட்டுனர்களின் பணியும் மெச்சத்தக்கது. ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், சுங்கச்சாவடிகளில் தனிப் பாதைகள் இல்லாததாலும் ஆம்புலன்ஸ்களால் குறிப்பிட்ட நேரத்தில் போய் சேர முடியவில்லை. கால தாமதமும் பலரது உயிரை பறித்து விடுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சரிகா என்ற 14 வயது சிறுமி சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையை அடைந்து விட்டார்.

மதியம் 12 மணிக்கு அவரை சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அபாய அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த மருத்துவமனையின் இரு ஆம்புலன்ஸ்களின் ஓட்டுனர்களும் பணிக்கு வரவில்லை. 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டபோது நீண்ட நேரமாக பதில் இல்லை. கடைசியாக 7 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அதற்குள் சிறுமி உயிரிழந்து விட்டார். உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்திருந்தால் சரிகாவை காப்பாற்றியிருக்க முடியும்.

இது போன்ற நிலைமைகளை எடுத்துக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நெடுஞ்சாலைகளில் உள்ள எல்லா சுங்கச் சாவடிகளிலும் ஆம்புலன்ஸ்களுக்கும் தனிப் பாதைகள் அமைக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளில் போதிய அளவுக்கு ஊழியர்கள் இல்லாததால் ஏற்படும் நெரிசலையும் நீதிமன்றம் சுட்க்காட்டி உள்ளது.

தமிழகத்தில் 2008 முதல் அமலில் உள்ள 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ் 911 வாகனங்களும் 41 இருசக்கர வாகனங்களும் செயல்படுகின்றன. மாதம் தோறும் சராசரியாக ஒரு லட்சம் அவசர அழைப்புகள் கையாளப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சேவையை மேம்படுத்த மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு உதவும்.  அதே நேரத்தில் சுங்கச்சாவடிகளில் மட்டுமின்றி பிற முக்கிய சாலைகளிலும் ஆம்புலன்ஸ்களுக்கென தனிப்பாதைகள் அமைக்க திட்டமிட வேண்டும். ஆம்புலன்ஸ் ஒலி கேட்டவுடனேயே சிக்னல்களில் அனைத்து வாகனங்களும் ஒதுங்கி வழி விட ஏற்பாடு செய்ய வேண்டும். காஞ்சிபுரம் சம்பவத்தை ஒரு பாடமாக கொண்டு மருத்துவத் துறையில் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதை தவிர்த்து சுழற்சி முறையில் முழு பணியாற்ற முன் வரவேண்டும். அப்போது தான் சரிகா போன்ற உயிர்களை வரும் காலத்தில் காப்பாற்ற முடியும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*