Home » அரசியல் » அடுத்த வாரம் சென்னை வருகிறார் : ஆர்.கே.நகர் தொகுதியில் அமித்ஷா

அடுத்த வாரம் சென்னை வருகிறார் : ஆர்.கே.நகர் தொகுதியில் அமித்ஷா

சென்னை, டிச.7: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வர உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், போட்டியிடுவதற்காக வழங்கப்பட்ட வேட்பு மனுக்களில் அதிமுக, திமுக, பிஜேபி உட்பட 72 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இவற்றில் 29 வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதேசமயம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பிஜேபி, டிடிவி தினகரன் அணி, நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவிவருகிறது. வேட்பாளர்கள் அனைவரும் விறுவிறுப்பான வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளதால் ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், பிஜேபி வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக தமிழக பிஜேபி சார்பில், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்பட்டது. இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த பட்டியலில், தேசிய தலைவர் அமித்ஷா, தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதனையடுத்து, பிஜேபி வேட்பாளருக்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அமித்ஷா அடுத்தவாரம் சென்னைக்கு வர உள்ளதாக தமிழக பிஜேபி வட்டாரம் தெரிவித்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*