Home » அரசியல் » மீனவர்களை அழைத்து வர அதிகாரிகள் குழு விரைவு

மீனவர்களை அழைத்து வர அதிகாரிகள் குழு விரைவு

சென்னை, டிச.6: ஓகி புயலில் சிக்கி மீட்கப்பட்ட மீனவர்களை அழைத்து வருவதற்காக அதிகாரிகள் குழு அண்டை மாநிலங்களுக்கு விரைந்திருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஓகி புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து இன்று பட்டினபாக்கத்தில்
செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புயலில் சிக்கிய மீனவர்களில் 2354 பேர் மீட்கப்பட்டு பத்திரமாக உள்ளனர். இவர்கள் மகாராஷ்டிரா,கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் அந்தந்த அரசுகளின் மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்காக துணை கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் அந்தந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்கான அனைத்து செலவுகளையும் அரசே மேற்கொள்ளும். 2354 மீனவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1066 பேர் என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் பற்றிய மேலும் விவரங்களையும் சேரித்திருக்கிறோம்.

மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது பற்றி இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவுக்கு ஏற்ப நிவாரண உதவிகள் வழங்கப்படும். புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பு முடிந்த பிறகு நிவாரண உதவிகள் கிடைக்கும்.

அரசு கணக்குப்படி 22 படகுகள் மற்றும் 66 மீனவர்கள் தான் இன்னும் திரும்ப வேண்டும். இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வள்ளம் எனப்படும் நாட்டுப்படகு மீனவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு மேற்கொண்ட அயராத முயற்சியின் காரணமாகவே மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை எந்த தொய்வும் இன்றி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*