Home » அரசியல் » ஆர்.கே.நகரில் இன்று அதிமுக ஆலோசனை

ஆர்.கே.நகரில் இன்று அதிமுக ஆலோசனை

சென்னை, டிச. 6: ஆர்கே நகரில் அதிமுக சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சார வியூகம் வகுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடுவது குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், பகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிப்பது, பிரச்சார வியூகம் வகுப்பது, பிரச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மாலை 5மணிக்கு துவங்கிய விவாதம் இரவு பத்து மணி வரை நீடித்தது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி இன்று மாலை ஆர்கே நகர் தொகுதியில் கட்சியின் செயல்வீரர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இன்று மாலை தண்டையார்பேட்டை ஏஎன்ஆர் மஹாலில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று செயல்வீரர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.

ஏற்கனவே திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உள்ளிட்டவர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில் அதிமுகவும் இன்று முதல் களத்தில் குதிப்பதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*