Home » குற்றம் » பல்வேறு வழக்குகளில் கைதானவருக்கு உளவியல் சிகிச்சை

பல்வேறு வழக்குகளில் கைதானவருக்கு உளவியல் சிகிச்சை

சென்னை, நவ.21: பல்வேறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, நகை பறிப்பு செய்த வழக்கில் கைதான அறிவழகனை தனி சிறைக்கு மாற்றி உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து கிருஷ்ணகிரியை சேர்ந்த அறிவழகன் (வயது 28) என்பவரை கடந்த வியாழக்கிழமையன்று வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்ட அறிவழகனை, தற்போது தனி அறைக்கு மாற்றி உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இளநிலை பட்டதாரியான அறிவழகன், பெங்களூருவில் 2 ஆண்டுகாலம் பணிபுரிந்து கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வந்துள்ளார்.

அன்றிலிருந்து அவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உளவியல் ரீதியான பாதிப்பு காரணமாக அறிவழகன் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டு, அயனாவரத்திலுள்ள மனநல மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து புழல் சிறை அதிகாரிகள் கூறியதாவது: அறிவழகனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டதில், பல பெண்களின் புகைப்படங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மற்ற கைதிகளின் பாதுகாப்பு கருதி அறிவழகனை தனி சிறைக்கு மாற்றியுள்ளோம்.

வழக்கின் உண்மை நிலையை கண்டறிவதற்காக, உளவியலாளர்கள் ரமேஷ் மற்றும் விஜயகுமார் மூலம் அறிவழகனுக்கு தொடர் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*