Home » சென்னை » ஆளில்லா விமானம் மூலம் புவிசார் ஆய்வு

ஆளில்லா விமானம் மூலம் புவிசார் ஆய்வு

சென்னை, நவ.21: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் தீயணைப்பு பணி உள்ளிட்ட பொது மக்கள் சேவையை மேம்படுத்துவதற்காக புவிசார் தகவல் அமைப்பு வரைபடத்தை ஆளில்லா விமானம் மூலம் தயாரிக்கும் பணியை அமைச்சர் வேலுமணி இன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் துவக்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணியினை துவக்கி வைத்து பேசும்பொழுது தெரிவிக்கையில், இந்தியாவிலேயே நான்காவது பெரிய உள்ளாட்சி அமைப்பான பெருநகர சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 75 இலட்சம் மக்கள் தொகையும் கொண்ட மாநகராட்சியாகும்.

உலக வங்கியின் ரூ.6.43 கோடி நிதியுதவியுடன் 2 ஆளில்லா வானூர்தி மூலம் அனைத்து கட்டடங்கள், சாலைகள் மற்றும் சாலைகளில் அமைந்துள்ள அனைத்து துறைகளின் சேவை பயன்பாட்டுப் பொருட்களை புவிசார் தகவல் அமைப்பு உதவியுடன் வரைபடமாக தயாரிக்கும் பணி மத்திய அரசின் வானூர்தி துறையின் தலைமை இயக்குநரகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், புலனாய்வு துறை மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகர காவல்துறை அனுமதி பெற்று தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி 120 நாட்களில் நிறைவு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவைகளான திடக்கழிவு மேலாண்மை, சாலை வசதி, தெருவிளக்குகள் மற்றும் மழைநீர் வடிகால்வாய்கள் ஆகியவற்றை மேம்படுத்தவும், இதர சேவை துறைகள் வழங்கி வரும் சேவைகளான குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*