Home » Flash News » கருப்பு பணம் ஒழிக்கப்படும்:நிர்மலா சீதாராமன்

கருப்பு பணம் ஒழிக்கப்படும்:நிர்மலா சீதாராமன்

சென்னை, நவ.8:கடந்த ஆண்டு இதே நாளில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கருப்பு பணம் குறைந்து இருக்கிறது என்றும், இதற்கான நடவடிக்கை இன்னும் தொடரும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிஜேபி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஊழலுக்கு கருவியாக இருந்தவர் மன்மோகன் சிங். பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது ஊழல் நடந்து கொண்டே இருந்தது. தனது ஆட்சியில் நடந்த ஊழலை மன்மோகன் சிங் கண்டும் காணாமல் இருந்தார் என குற்றம்சாட்டினார்.

மேலும் நீர், நிலம், ஆகாயம் என அனைத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடு நடந்தது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த அக்கறையும் இல்லை. பணமதிப்பு நடவடிக்கை குறித்து மன்மோகன் சிங்கின் பேச்சு ஏமாற்றத்தையும் மனவேதனையையும் தருகிறது என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, பணமதிப்பு நீக்க நடவடிக்கை திடீரென எடுத்த நடவடிக்கை இல்லை. தேர்தல் அறிக்கையில் கூறியபடியே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரொக்கத்தின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியே பண மதிப்பு நீக்க நடவடிக்கை.

பழைய ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பயங்கரவாதிகளிடம் இருந்த பணம் முடங்கியது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் செல்லாதவையாகிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் நிகழும் கல் எறியும் சம்பவங்கள் நடப்பு ஆண்டில் கணிசமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த 9 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.36 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்துள்ளது.கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கை இன்னும் தொடரும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*