Home » Flash News » மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை,நவ.5:பிரதமர் நரேந்திர மோடி, நாளை சென்னை வரவுள்ளார். அவரது பாதுகாப்புக்காக 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழைக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் மனு அளிப்பார் என தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை சென்னை வருகிறார். 10 மணி அளவில் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் ‘தினத்தந்தி’ பவள விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் மோடியை சந்தித்துப் பேச உள்ளனர். அதுபோல தமிழக பிஜேபி தலைவர்கள் தமிழிசை
சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகன் ஆகியோருடனும் மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் 6-ம் தேதி ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். அதன்பிறகு கடந்த ஜூலை 27-ல் ராமேசுவரத்தில் நடந்த அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றார். இந்நிலையில், 11 மாதங்களுக்குப் பிறகு சென்னை வரும் மோடிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க தமிழக பிஜேபியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மீனம்பாக்கம் விமானநிலையத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் பிரதமரை வரவேற்கவுள்ளார். இதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் வருகை தரும் பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்கவுள்ளார்.

அப்போது தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்க அளிப்பதோடு நிவாரண நிதி மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது.

மோடியின் வருகையையொட்டி சென்னை மெரீனா கடற்கரை சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விழா நடைபெறும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர சோதனையில் போலீசாரும், அதிரடிபடை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*