Home » தமிழ்நாடு » மயிலம் முருகன் கோயிலில் சூரசம்ஹார பெருவிழா

மயிலம் முருகன் கோயிலில் சூரசம்ஹார பெருவிழா

விழுப்புரம், அக்.26: கந்த சஷ்டி திருவிழாவையொட்டி மயிலம் முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மயில் வடிவிலான மலையில் அமர்ந்தபடி முருக பெருமான், வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 20-ந் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. முக்கிய விழாவான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து மாலை 7 மணியளவில் ஸ்ரீ பாலசித்தர் சன்னதியில் ஆறுமுகக் கடவுள் வேல் வாங்கி, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினத்தின் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.
அதேபோல், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி புதன்கிழமை மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் பீமநாய்க்கன் தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்தசஷ்டி பெருவிழா சூரசம்ஹாரத்துடன் நேற்று நடைபெற்றது.

இதேபோல, சாலாமேடு சீனுவாசா நகர் முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்வுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று முருகபெருமானை வழிப்பட்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*