w
Home » சென்னை » கட்-அவுட்டுகளுக்கு கோர்ட் தடை நீடிப்பு

கட்-அவுட்டுகளுக்கு கோர்ட் தடை நீடிப்பு

சென்னை, அக்.26: உயிருடன் இருப்பவர்களின் படம் கட்-அவுட்களில் இடம்பெற விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள மனுவை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து கட்-அவுட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகர், நாவலர் தெருவைச் சேர்ந்த திருலோச்சனகுமாரி என்பவர் தொடர்ந்த மனுவில், தன் வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில்,   அனுமதி பெற்று வைக்கப்படும் அனைத்து வகையான டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனர்கள், விளம்பர பலகைகளில் உயிருடன் இருப்பவர்களின் எவரது புகைப்படமோ அல்லது படமோ இடம்பெறவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

அதை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை பிறப்பித்து இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடிவு செய்தது. இதற்காக, அரசு வழக்கறிஞர் விவேகானந்தன், நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி ஆகியோர்  அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு ஆஜராகி, பேனர் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய இருக்கிறோம். அந்த மனுவை அவசர வழக்காக எடுத்து இன்றே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது நீதிபதிகள், டிஜிட்டல் பேனர் தொடர்பாக, 2008,  2014 ஆம் ஆண்டே இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவுகள் எல்லாம் முறையாக அமல்படுத்தப் பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் அவசரம் காட்ட என்ன இருக்கிறது? இந்த முறையீட்டை ஏற்க முடியாது. மனு தாக்கல் செய்யட்டும். அதன்பின்னர், வழக்கு பட்டியலிடப்பட்டு, விசாரணைக்கு வரும் போது, விசாரிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

திருச்சி பேனர்: தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் திருச்சியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்களில் உயிருடன் இருப்பவர்கள் படம் இடம் பெற தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள் எம்.எம்.

சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் அனுமதி இல்லாமல் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை இன்று மாலைக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*