Home » Flash News » டெங்கு: மத்திய குழு வருகை

டெங்கு: மத்திய குழு வருகை

‘புதுடெல்லி, அக்.12: டெல்லியில் பிரதமர் மோடியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்
செல்வம் இன்று காலை சந்தித்து பேசினார். இதன் பின் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு நிலவரத்தை ஆய்வு செய்ய மத்திய மருத்துவர்கள் குழுவை விரைவில் அனுப்பி வைக்க தன்னிடம் பிரதமர் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் தங்கமணி, மைத்ரேயன் எம்.பி., மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர். இன்று காலை பிரதமர் இல்லத்தில் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போத மைத்ரேயன் எம்.பி. உடனிருந்தார்.

இதன் பின்னர் பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமரிடம் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. தமிழகத்தின் பிரச்சனைகளை எடுத்து கூறினேன். அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் நிலக்கரியை அனுப்பி உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டேன். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது பற்றியும் எடுத்து கூறினேன். இதற்காக மாநில அரசு எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகளையும் விளக்கினேன். இது பற்றிய ஆய்வுக்காக மத்திய மருத்துவர்கள் குழுவை விரைவில் அனுப்பி வைப்பதாக பிரதமர் என்னிடம் உறுதி அளித்தார் என்றார்.

பின்னர் நிருபர்கள் குறுக்கிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், உங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் அதன் அடிப்படையில் தான் பிரதமரை சந்திக்க வந்திருப்பதாகவும் கூறப்படுகிறதே என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் முதல்வருடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எல்லா முடிவுகளையும் அவர் என்னை கலந்து பேசிதான் எடுக்கிறார். என்னால் முதலமைச்சருக்கு எந்த மனவருத்தமும் ஏற்படாது. அந்தவகையில் நான் நடந்து கொள்ள மாட்டேன் என்றார். இதையடுத்து உங்களது தர்ம யுத்தம் என்ன ஆனது. நீங்கள் விதித்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதா? அரசின் மீது நீங்கள் ஊழல் புகார் கூறினீர்களே என்று அடுக்கடுக்கான கேள்விகளை நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், எங்களது நிபந்தனைகள் ஏற்கப்பட்டதால்தான் நாங்கள் இணைந்தோம்.

தற்போது எங்களது தர்ம யுத்தம் முடிவடைந்து விட்டது. என்னுடைய நோக்கமும், முதலமைச்சர் எடப்பாடியின் நோக்கமும் ஒன்று தான். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக ஒன்றுபட்டு செயல்படுகிறோம். இதில்உள்நோக்கம் கற்பிக்காதீர்கள். உங்களது யூகங்களுக்கும், கூறப்படுகிறது, அறியப்படுகிறது என்கிற கேள்விகளுக்கும் என்னால் பதிலளிக்க முடியாது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு முழு அளவில் ஒத்துழைப்பு அளிப்பதில் எந்த தவறும் இல்லை. அதே போல் மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசும் முழு ஆதரவு தந்து வருகிறது.

குறிப்பாக பிரதமரின் ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 3 லட்சம் வீடுகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.
பிரதமரை சந்திக்க அமைச்சர் தங்கமணி உங்களுடன் வரவில்லை ஏன்? என்று கேட்ட போது அவர் நிலக்கரி பிரச்சனை தொடர்பாக மத்திய மின்துறை அமைச்சரை இன்று மதியம் சந்திக்க இருக்கிறார். அவர் என்னுடன் வராததற்கு எந்த உள்நோக்கமும் கற்பிக்காதீர்கள் என்று கேட்டு கொண்டார்.

டிடிவி தினகரனுடன் சமரசம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்ட போது கட்சியில் கீழ் மட்டத்தில் இருந்து உழைத்து வருபவர்களைத்தான் சேர்த்து கொள்வோம் என்றார். பேட்டியின் போது மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*