Home » Flash News » தீபாவளிக்கு மெர்சல் வெளியாவதில் சிக்கல்

தீபாவளிக்கு மெர்சல் வெளியாவதில் சிக்கல்

சென்னை, அக்.11: கேளிக்கை வரியை நீக்கும் வரை புதிய படங்களை வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால் தீபாவளிக்கு திட்டமிட்டப்படி மெர்சல் படம் வெளியாகுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.இந்நிலையில் வரியை நீக்குவது குறித்து திரைப்படத்துறையினர் நேற்று அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாளில் முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

திரைப்படத்துறைக்கு 10 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது. இதை எதிர்த்து திரைப்படத்துறையினர் போராடி வருகின்றனர். கேளிக்கை வரியை நீக்கும் வரை புதிய படங்கள் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் கடந்த வாரம் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த வாரமும் எந்த படமும் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேளிக்கை வரியை நீக்குவது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன், விநியோகஸ்தகர் சங்கத்தின் தலைவர் அருள்பதி உள்ளிட்ட குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி ஆகியோரை சந்தித்து பேசினர்.
அப்போது கேளிக்கை வரியை முழுமையாக நீக்க வேண்டும் என அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினர். இருப்பினும் முதல்சுற்று பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், எங்கள் கோரிக்கைகளை அமைச்சர்களை சந்தித்து தெரிவித்துள்ளோம். ஓரிருநாளில் முதல்வரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றார். கேளிக்கை வரியை நீக்கும் வரை புதிய படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவால் திட்டமிட்டப்படி தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் அதற்குள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு எட்டப்படும் என சினிமாத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*