Home » Flash News » சந்தானத்தை கைது செய்ய போலீஸ் தீவிரம்

சந்தானத்தை கைது செய்ய போலீஸ் தீவிரம்

சென்னை, அக்.11:பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பிரேம் ஆனந்த் என்ற பிஜேபி வழக்கறிஞரை தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சந்தானத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நகைச்சுவை நடிகர் சந்தானம் கடந்த 2015-ம் ஆண்டு வளசரவாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும் பில்டிங் கான்ட்ராக்டருமான சண்முகசுந்தரம் (54) என்பவரிடம் கோவூரை அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் கல்யாண மண்டபத்துடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உறுதி அளித்தபடி சண்முகசுந்தரம் நடந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட தொகையை சண்முக சுந்தரம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால், மீதி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், மீதம் உள்ள பணத்தை திரும்பக் கேட்டு நடிகர் சந்தானம் வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரத்தின் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அவருடன் அவரது உதவியாளர் ரமேஷ் என்பவரும் சென்றுள்ளார். அங்கு சண்முகசுந்தரத்துடன் அவரது நண்பரும், பிஜேபி பிரமுகருமான பிரேம் ஆனந்த் ஆகியோரும் இருந்துள்ளனர். பணத்தை திரும்ப கேட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறி ஒருவர் மீது மற்றொருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது சண்முகசுந்தரம் மற்றும் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் ஆகியோரை சந்தானம் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பிரேம் ஆனந்தின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
தகவல் அறிந்து வளசரவாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார்.

அதன் பேரில் கைகலப்பில் ஈடுபட்ட நடிகர் சந்தானம் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று சந்தானத்தை தேடி அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். அவர் அங்கு இல்லையென ஊழியர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்தானம் மனுதாக்கல் செய்தார். இன்று 2வது நாளாக இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் தலைமையில் போலீசார் தேனாம்பேட்டையில் உள்ள சந்தானம் வீட்டிற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள சந்தானத்தை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*