Home » அரசியல் » நிபந்தனைகளை சசிகலா மீறினாரா?

நிபந்தனைகளை சசிகலா மீறினாரா?

சென்னை, அக்.8: பரோலில் வந்துள்ள சசிகலா நிபந் தனைகளை மீறினாரா என்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது குறித்து
கர்நாடக சிறைத்துறை தமிழக காவல்துறையிடம் விளக்கம் கேட்கும் என்று கூறப்படுகிறது.

உடல்நலம் குன்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை பார்ப்பதற்காக வி.கே.சசிகலா கடந்த 6-ந் தேதி மாலை பெங்களூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். அன்று இரவு கார் மூலம் சென்னை வந்து சேர்ந்த அவர் தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கினார்.

நேற்று காலை அவர் வீட்டில் இருந்து நந்தனம், தேனாம்பேட்டை வழியாக பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு சென்று கணவரை 15 நிமிடம் பார்த்தார். சுமார் 12 மணி அளவில் வீட்டை விட்டு புறப்பட்ட அவர் அரை மணி நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றடைந்தார். நடராஜனை 15 நிமிட நேரம் பார்த்து விட்டு அருகில் உள்ள அறையில் மதியம் 2 மணி வரை இருந்து விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

மருத்துவமனைக்கு செல்வதற்கு ஜெயலலிதா பயன்படுத்திய டோயோட்டா பிராடியோ என்ற சொகுசு காரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கர்நாடக சிறைத்துறை விதித்துள்ள நிபந்தனையின்படி அவரது காருடன் 3 கார்கள் மட்டுமே செல்வதற்கு காவல்துறை அனுமதியளித்து இருந்தது. ஆனால் நேற்று 7 கார்கள் வரை சென்றதாக கூறப்படுகிறது.

மருத்துவமனை வளாகத்திற்குள் சசிகலாவின் ஆதரவாளர்கள் சுமார் 100 பேர் போலீஸ் தடுப்பையும் மீறி உள்ளே சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் டி.டி.வி.தினகரனின் தம்பி பாஸ்கரன், தினகரனின் மனைவி அனுராதாவின் அண்ணன் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் ஆதரவு எம்.பி.க்கள் 2 பேரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு எம்எல்ஏவும், 2 முன்னாள் எம்எல்ஏக் களும் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

பரோல் அளிக்கப்பட்ட 5 நாளில் சசிகலா அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதும், அரசியல் சார்ந்த எவரையும் சந்திக்கக்கூடாது என்பதும், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்பதும் முக்கியமானவைகளாகும்.

ஆனால் சசிகலா நேற்று மருத்துவமனைக்கு சென்றபோது அவருடன் பத்திரிகை நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி கேமராமேன்கள் அதிக அளவில் சென்றனர்.

கடும் நிபந்தனைகள் காரணமாக சசிகலாவை வரவேற்று அதிக அளவில் பேனர்கள் வைக்கப்படவில்லை. ஆதரவாளர்களும் எதிர்பார்த்த அளவுக்கு கூடவில்லை என்று கூறப்படுகிறது.

சசிகலாவை சந்திக்க தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த சந்திப்பு நடைபெற்றால் அது விதிகளை மீறியதாகிவிடும் என்பதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சசிகலா தங்கியுள்ள தி.நகர் இல்லத்தின் முன்பும் அவர் செல்லும் இடங்களிலும் போலீசார் பின் தொடர்கிறார்கள்.

அவருக்கென்று தனிப்பட்ட முறையில் காவல் அளிக்கப்படவில்லை என்ற போதிலும் விதிகளை மீறினால் அது பற்றி கர்நாடக சிறைத்துறையிடம் தெரிவிக்கப்படும். விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் பரோல் ரத்தாகிவிடும் என்பதால் சசிகலா தரப்பினர் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பதாக கூறப் படுகிறது.

இது குறித்து அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், நிபந்தனைப்படி சசிகலா யாரையும் சந்திக்கக்கூடாது. ஆனால் மற்றவர்கள் அவரை சந்திக்க முடியும் என்று நகைச்சுவையாக கூறினார்.

டி.டி.வி.தினகரன் கூறுகையில், சசிகலாவுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப் பதற்கு எடப்பாடி பழனிசாமி அரசே காரணம். சசிகலா நினைத்திருந்தால் போயஸ் கார்டன் இல்லத்தில் கூட தங்கியிருக்க முடியும் என்றார்.

11-ந் தேதி வரை சசிகலா போலீஸ் கண்காணிப்பிலேயே இருப்பார் என்றும் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் கர்நாடக சிறைத்துறையிடம் புகார் கூறப்படும் என்றும் தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*