Home » விளையாட்டு » ஹர்திக் பாண்ட்யாவை புகழும் இரு அணி கேப்டன்கள்

ஹர்திக் பாண்ட்யாவை புகழும் இரு அணி கேப்டன்கள்

இந்தூர், செப். 25: ஹர்திக் பாண்ட்யா இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து என்று கேப்டன் விராத் கோலி சொன்னார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரைக் கைப்பற்றியது. இந்தூரில் நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 47.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 78 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்குப் பின் பேசிய விராத் கோலி, இந்த பிட்சில் 330-340 ரன்கள் வரை குவித்திருக்க முடியும். ஆஸ்திரேலியா 35- 40 ரன்கள் குறைவாக எடுத்தது எங்களுக்கு நல்லதாகிவிட்டது. இந்தப் போட்டியில் பாண்ட்யாதான் ஸ்டார். பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் அசத்தி வருகிறார்.

அவரை போன்ற வீரர்கள்தான் தேவை. பாண்ட்யா இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து. சுழல் பந்துவீச்சை வதம் செய்யுமாறு அவரைப் பின்னால் இருந்து தூண்டியவரும் நான்காவது இடத்தில் அவரை களமிறக்கச் சொன்னவரும் ரவிசாஸ்திரிதான். எங்கள் வெற்றிப் பயணம் தொடரும் என்றார்.

ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி போட்டியை மாற்றிவிட்டார் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.
போட்டிக்குப் பின் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், நாங்கள் சிறப்பாக ஆடினோம். ஆரோன் பிஞ்ச் பிரமாதமாக ஆடி சதமடித்தார். 37-38 ஓவர் வரை சிறப்பாக ஆடிய நாங்கள் பிறகு அதை தக்க வைக்கத் தவறிவிட்டோம். இந்திய பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும் பும்ராவும் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் 330 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால் போட்டியின் தன்மை மாறியிருக்கும். அதே நேரம் ஹர்திக் பாண்ட்யா, சிறப்பாக விளையாடி போட்டியை அற்புதமாக மாற்றிவிட்டார் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*