Home » Flash News » 43,000 ஆசிரியர்க்கு ஊதியம் ‘கட்’: தமிழக அரசு

43,000 ஆசிரியர்க்கு ஊதியம் ‘கட்’: தமிழக அரசு

சென்னை, செப்.14:போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடையாது என்றும், பணிக்கு வராத 43 ஆயிரத்து, 508 ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள், நீட் தேர்வால் மருத்துவ கல்வி படிக்க முடியாமல் போனதால், பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்தம் பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க குழு அமைக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கிருபாகரன், அரசு பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தை கடுமையாக கண்டித்தார். மேலும், அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலவரம், நிலை குறித்து 14 கேள்விகளை கேட்டு, அதற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜேக்டோ – ஜியோ போராட்டம் குறித்தும், அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், தொடக்க கல்வி இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

வேலை நிறுத்தத்ததில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது, நடத்தை விதிகள் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நேற்று வரை 33 ஆயிரத்து 487 ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 43 ஆயிரத்து 508 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு
உள்ளது.

வேலை நிறுத்த நாட்கள், அங்கீகரிக்கப்படாத விடுப்பு நாட்களாக கணக்கிடப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது. போராட்ட காலத்தில் ஊதியம் வழங்க போவதில்லை. ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 21 ஆயிரம் முதல் ஊதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*