Home » ஆன்மீகம் » திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி மஹா புஷ்கர விழா

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி மஹா புஷ்கர விழா

திருச்சி, செப்.13: திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நடந்த யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

கங்கை, யமுனை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் நடைபெறுவதை போன்று, காவிரியின் ராசியான துலாம் ராசியில் நடைபெறும் விழாவுக்கு காவிரி புஷ்கரம் என பெயர்.

குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும்போது, துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழா என்பதால் காவிரி மகா புஷ்கரம் என அழைக்கப்படுகிறது. காவிரி மகா புஷ்கர விழா திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி கரையில் நேற்று தொடங்கியது.
காவிரி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் அருகே உள்ள மாமுண்டி கோனார் திடலில் கடந்த மாதம் 24–ந் தேதி யாகசாலை பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

காவிரி மகா புஷ்கர விழாவின் தொடக்க நாளான நேற்று காலை 6.45 மணிக்கு அம்மாமண்டபம் அருகில் காவிரி புஷ்கர பிரம்ம யக்ன கமிட்டியினர் வந்தடைந்தனர். பின்னர் அங்கு காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீராடினர். இதனை தொடர்ந்து பக்தர்களும் புனித நீராடினர்.

மதியம் 12 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலை பூஜைகள் முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் நேற்று இரவும் யாகசாலை பூஜைகள் நடந்தன. வருகிற 23–ந்தேதி வரை தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் இந்த யாக சாலை பூஜைகள் நடைபெறும்.

காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஸ்ரீரங்கத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சுகாதார துறை சார்பில் 15 டாக்டர்கள், 15 செவிலியர்கள் மற்றும் 15 பணியாளர்கள் கொண்ட ஒரு மருத்துவ குழு அமைக்கப்பட்டு, அவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். உடல் பரிசோதனை செய்து அதற்கான சிறப்பு முதலுதவியுடன் சுகாதார சேவை செய்யப்பட்டு வருகின்றது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*