Home » அரசியல் » பிரதமர் வேட்பாளராக களமிறங்கத் தயார் : ராகுல் காந்தி

பிரதமர் வேட்பாளராக களமிறங்கத் தயார் : ராகுல் காந்தி

பெர்க்லே, செப்.12: காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயார் என்றும் ஆனால் அது குறித்து கட்சி முடிவெடுக்கும் என்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் இரண்டு வார சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலையில் அவர் பேசியதாவது:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளாரக போட்டியிட நான் தயார். ஆனால், இது குறித்து முடிவு செய்ய கட்சியில் அமைப்பு உள்ளது. கட்சி அறிவித்தால் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக உள்ளேன்.

அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் உள்ளது. அகிலேஷ் யாதவ், ஸ்டாலின், பிரேம்குமார் துமாலின் மகன் அனுராக் தாக்கூர், ஆகியோரும் வாரிசு அரசியல்வாதிகளே. நடிகர், அபிசேக் பச்சன் கூட வாரிசு அடிப்படையில் வளர்ந்தவர். இதனால், வாரிசு அரசியல் குறித்து என் மீது மட்டும் குற்றம் சுமத்த வேண்டாம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா வளர்ச்சி பெற்றது. இந்தியாவின் வளர்ச்சி அதிகளவில் இருந்ததும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். தலைமை பொருளாதார அரசியல் ஆலோசகரிடமோ, அமைச்சரவையிலோ கலந்தலோசிக்காமல் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ஜிஎஸ்டி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வேலைவாய்ப்பு, சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.சீனா போல் அல்லாமல் இந்தியாவில் ஜனநாயக வழியில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள் சுட்டு கொல்லப்படுகின்றனர். அனைவரிடமும் ஆலோசனை நடத்தி தான் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. அனைத்து முடிவுகள் எடுக்கிறது. எந்த கொள்கையையும் யார் மீதும் திணிக்கவில்லை.
இன்று நமது எம்பிக்கள் சட்டத்தை உருவாக்குவதில்லை. கிராமங்களில் சாலை அமைப்பது குறித்து தான் அவர்கள் அதிக கவலை கொண்டுள்ளனர். சட்டத்தை உருவாக்கும் வகையில், அவர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்திற்கு என எந்த சட்டமும் இல்லை. பிரதமர் அலுவலகத்தில் மட்டுமே அதிகாரம் குவிந்து கிடக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் வலிமையை பிரதமர் குறைத்து விட்டார்.

காஷ்மீரில் அமைதி கொண்டு வர 9 வருடங்களாக கடினமாக உழைத்தோம். 2013ல் பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்தோம். ஆனால், ஆட்சி அமைத்த 30 நாளில், 9 வருட பணியை பிஜேபி கூட்டணி அரசு அழித்து விட்டது. காஷ்மீரில் இளைஞர்களை பிடிபி கட்சி அரசியலுக்கு அழைத்து வந்தது. ஆனால், மோடியுடன் கூட்டணி அமைத்ததும், இந்த விஷயத்தை அவர் அழித்துவிட்டார். மோடி சிறந்த பேச்சாளர். ஆனால், தனது செயல் மற்றும் பணி மக்களிடம் ஆலோசனை செய்வதில்லை. என் மீது தவறான பிரசாரத்தை பிஜேபி நாடு முழுவதும் பரப்பி வருகிறது.பிரிவினைவாத அரசியல் இந்தியாவை பிரித்துள்ளது.

வன்முறைக்கு நான் எதிரானவன். அனைத்து வகையிலான பயங்கரவாதம் கண்டனத்திற்குரியவை. எனது பாட்டியை சுட்டு கொன்றவர்கள் கூட எனது குடும்ப நண்பர்களே. அவர்களுடன் நான் சிறு வயதில் விளையாடியுள்ளேன். வன்முறைக்கு தான் எனது பாட்டி, தந்தையை பறி கொடுத்துள்ளேன். வெறுப்பு, கோபம், வன்முறை, ஆகியவை நம்மை அழித்து விடும், பிரிவினைவாத அரசியல் பெரும் ஆபத்து.  இவ்வாறு அவர் பேசினார்.

அவர் தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழகத்திலும் நடைபெறும் கூட்டங்களில் பேச உள்ளார். முன்னதாக இதே பல்கலைக்கழகத்தில் கடந்த 1949ம் ஆண்டு ராகுலின் கொள்ளு தாத்தா ஜவகர்லால் நேரு மாணவர்கள் மத்தியில் உரையாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*